உரையாடல்

மரக்கிளை
தலை தாழ்த்தி
நீர் உதறி
தரையிடம்
சொன்னது
நனைந்த
சந்தோஷத்தை

 

அப்பா

முன்பு அப்பாவோடு
திண்ணையில்
முற்பகலில் தாமதமாக
காலை உணவு கொத்திய
காக்கைகள்
இப்போது
சுற்றுச்சுவரில்,
சிறு இலையில்
சாதத்தை
கொத்துகின்றன
அப்பா போன
விஷயம் தெரியாமலேயே.

 

சதா

சதா உழன்று
கொண்டிருக்கும்
உன் தெற்றுபல்
சிரிப்பு
சாலையில் ஓடினாலும்
உழன்றபடி இருக்கும்
சிமென்ட் லாரியின்
உருளையைப் போல

 

வனப்பு

வாழையிலையில் பிரியும்
பச்சைக் கோடுகள்
மழை முடிந்த மாசற்ற
தென்னங்கீற்றுகள்
கருப்பு அருவியின்
உள்பக்கம்
நெய்பவரின் தோளில்
பட்டு நூல் குவியல்
காற்றில் அலையும்
சரக்கொன்றை கொத்துகள்
இப்படியெல்லாம்
பார்த்ததை விட
வனப்பானது
ஈரிழைத்துண்டுடன்
ஈர முடிக்கற்றைகளும் சேர
சுற்றிய பின்னலும்
பின் கழுத்து ஈரத்துடன்
நீ எழுப்பிய
ஏதோ ஒரு பண்டிகையின்
காலைபொழுதும்

 

குரல்

சிலிண்டர்காரரின் வருகை
நீர் கேட்கும் பூ விற்பவர்
பேரனின் பள்ளி ஆட்டோ
அகாலத்தில் திறக்கும்
“கேட்”டு சத்தம்
நிரம்பி வழியும்
மேல்தொட்டி நீர்
டீவியில் சிவாஜி
படம்
இவையெதற்கும்
முன்பு போல்
குரல் கொடுப்பதில்லை
சந்தன மாலை ஆடும்
கண்ணாடி சட்டகத்தில்
விபூதியுடன் சிரிக்கும்
அப்பா !