வளர்ப்பு மீன்களிடம்
பிரியம் அவளுக்கு
அவரும்,
பிள்ளைகளும் வெளியே
போன பின்னே
கண்ணாடித் தொட்டியில்,
நீர் மாற்றி,
துகள்கள் கொட்டி,
பெயரிட்ட மீன்களோடு
இரு கன்னத்தின்
உள்பக்கம் கடித்து
உதடு குவித்து
அவை போலவே
செய்து சிரித்து
பண்பலை பாட்டுக்கு
தலையாட்டி, துணி காய
வைக்கப் போனாள்
தானும் நீரில்லாத,
ஜன்னல் வைத்த
ஒரு கான்கிரீட் தொட்டியில்
இருப்பது தெரியாமல்.
Be First to Comment