மயில் கழுத்து, குங்குமம்,
வெந்தயம், காப்பி,
வெங்காயம், கத்திரிப்பூ,
ராமர், மாம்பழம்,
சிமென்ட், மாந்துளிர்,
அரக்கு, பஞ்சுமிட்டாய்,
கனகாம்பரம், செம்மண்,
சாம்பல்
இவை யாவும்
வார்த்தையாகவும்,
வெறும் பொருளாகவும்
புரிந்திருந்த வயதில்
புடவைக்கடக்காரரிடம் அம்மா,
நிறமானிக்கும் புரியாதபடி
பேசிப்பேசி அவற்றின்
இயல்பு மாற்றியமைத்தாள்
என் வண்ணத் தட்டின்
சிறு வட்டங்களில்,
நிறங்களாக.
*நிறமானி – நிறம் அளக்கும் கருவி
Be First to Comment