எங்க போட்ட சனியனே
என அறை வாங்கியிருக்கலாம்
வேற வாங்கிக்கலாம் கண்ணு
என ஆறுதல் சொல்லப்பட்டிருக்கலாம்
ஒற்றைச் செருப்பு மாட்டி
சமனில்லாமல் நடக்கப் பழகியிருக்கலாம்
தோள் சேலை நனைத்து,
வாய் திறந்து தூங்கும் பொது
விழுந்திருக்கலாம்
ஒரு விபத்தின் மீதியாகவும்
இருக்கலாம்
ஒரு தொழிலதிபரின் குழந்தை
கடத்தப் பட்டிருக்கலாம்
அவர்களே சமாதானமானாலும்
எனக்குத் தாங்காது..
சாலையில் கவிழ்ந்திருக்கும்
ஒரு குழந்தைக்கான
ஒற்றைச் செருப்பைப்
பார்க்கும்போதெல்லாம்
Be First to Comment