உன் கேள்விகள் பெரும்பாலும்
இரை நெருங்கிப் பாயும் சிறுத்தையென,
சொருகித் திருகப்படும் நீள வாளென,
எதிர்பாராமல் இறங்கிய வேல முள்ளென,
என்னைத் தாக்கும்
என் பதில்கள் பெரும்பாலும்
கூர் கண்ணாடி சில்லுகள் பதிந்த
மதில் சுவற்று அணில் போல,
சாவகாசமாக விழும் இலை போல
பூங்காவில் கை பிடித்து நடக்கும்
முதியவரின் நடை போல
இருந்திருக்கும்
பதில் இல்லாத பொழுதுகளில்
ஒரு ஆவேசமான மௌனம்
கூடு கட்டி விடும்
என்னைச் சுற்றி.
Be First to Comment