Skip to content

Author archive for: Toto

தலைகீழ் மழை

விடியும்போது
ஆரம்பித்து விட்டது..
நடை திறக்காத கோவில்
நிரம்பி, மேலும்
சின்ன வளையங்கள்
உண்டாக்கியபடி
குளம்
நனைந்த கொடிமரம்
தேர் நிறுத்திய
தகர கொட்டகையின்
மேல் நீரின் தாளம்
எப்படி இருந்தாலும்
நூறு கால் மண்டப
வவ்வால்கள் கேட்டதெல்லாம்
பெரும்சப்தம்
தலைகீழ் மழையால்.

வெளியேறியது

பத்தாம் நாள்
காரியத்து சாப்பாடு
முடித்த மதியத்தில்
மொட்டையடித்திருந்த
சின்னண்ணன் பாட்டியிடம்
ஏதோ சொல்லி
சிரிக்கையில்,
படியிறங்கி ஊர்ந்து
வெளியேறியது
ஒரு மரணம்.

சடை

அதிகாலை பெய்த
மழை முடிந்து
முதல் வெய்யிலின்
மினுமினுப்பில்
நீர் சொட்டியபடி
புன்னகைத்தது
மஞ்சள் சரக்கொன்றை..
முன் பக்கம் போடப்பட்ட
அவளின் ஒற்றைச்
சடையைப்போல்

அப்பா

எவர்சில்வர் பாத்திரத்தில்
பூக்காத பூக்களுடன்
பொறித்த பெயரிலும்
வேட்டியின் ஓர சலவை
இனிஷியல் எழுத்திலும்
ரேஷன் அட்டை குடும்பத் தலைவர்
புகைப்படத்திலும்
இன்னும் வாழ்ந்தபடி
அப்பா !
%d bloggers like this: