Skip to content

Category archive for: Uncategorized

ரயில்

பின்னோக்கிப்
பறக்கும் உன் முடி
நீராவிப் புகை பறக்கும் ரயில்
உன் காதின் சுழிப்பு
மலை ரயில்வழி  வளைவு
சாலை கடக்கும் நீ
பாலம் கடக்கும் ரயில்
கண் மூடும் நீ
குகையைக் கடக்கும் ரயில்
நிறுத்தாத உன் பேச்சு
ரயில் மேல் பெருமழை
கடைசியாய்க்
கையசைத்துப் போன நீ
ரயில் கடந்த சிற்றூர்
நடைமேடையென நான்,
வெறுமையையாய்

 

கண்ணாடிச் சிறகு

மேகத்தின் நிழலில் மரம்
மரத்தின் நிழலில் தூளி
தூளியின் நிழலில் தட்டான்
தட்டானின் இரு
கண்ணாடிச் சிறகுகளில்
என் எழுதாத
கவிதை.

வாடை

பல வருடத்திற்கு முன்
பத்து பேர் தீக்குளித்து
பெரும்கலவரம் மூண்டு
பதினைந்து நாள்
காவலில் இருந்த
ஒரு பழைய
தீவிர தொண்டனுக்கு
நினைவெங்கும்
மண்ணெண்ணெய்
வாடை  ஞாபகம்,
வெளியேற்றப்பட்ட
தன் தலைவர்
பழைய கட்சியில்
மீண்டும் சேர்ந்ததைப்
படித்துக்
காட்டப்பட்ட போது.

 

மணி

பள்ளியின் விடுமுறை நாளில்
காற்றில் ஆடிக்கொண்டிருந்தது
தண்டவாளத் துண்டு
ஒன்று
தனியாக,
மணியடிக்கும்
கட்டாயமில்லாமல்.
%d bloggers like this: