Skip to content

Category archive for: Uncategorized

100 ரூபாய்

யாரும் யாரையும்
கவனிக்கவே முடியாத
நெரிசலான
ஒரு மாநகர பஸ் பயணத்தில்
“ப்ளூஸ்டார் ஒண்ணு..
பாஸ் பண்ணுங்களேன்”
என்று 100 ரூபாய்
கொடுத்தார் ஒருவர்..

ஒரு கையில்
கட்டைப பையும்
கம்பியும் பிடித்து
தடுமாறாமல் அந்த நோட்டை
வாங்கி பாஸ்
பண்ணுவதற்குள்

“அப்படியா.. எப்போ ?”
என்று யாரோடோ
போனில் பேசி
அவசரமாக
சிக்னலில் இறங்கிவிட்டார்
அவர்..

என் நேர்மையைப்
பார்த்து பல்லிளித்தபடியே
இருந்தது

பாஸ் செய்யப்படாத
அந்த 100 ரூபாய் !

முரண்

குட்டிக் கிண்ணத்தில்

தண்ணீர் வைத்தார்

குடிக்க‌


சின்ன சின்ன‌

சப்போட்டா பழம் குடுத்தார்

சாப்பிட‌


ஒரு விரல் நீட்டி

நாலு விரல் கால்கள்

பற்றி வெளியே

எடுத்து ஏதோ பேசினார்,

பச்சைக்கிளியிடம்


பெரிய கத்திரி எடுத்து

மெதுவாக வெட்டினார்

சற்றே நீண்ட‌

சிறகுகளை


காலில்லாத

மரத்தடி

ஜோசியர்.

தெரிந்த‌தும் ம‌றைத்த‌தும்

சிரிக்காம‌ல்,
நேய‌ர் விருப்ப‌ம் கேட்காம‌ல்,
நூல‌க‌ம் போகாம‌ல்,
போஸ்ட‌ர் பார்க்காம‌ல்,
முத‌ல் ஆட்ட‌ம் ர‌சிக்காம‌ல்
இருந்த‌தில்லை

பூனைக‌ள் அடுப்பில்
ப‌டுத்திருந்த‌
நாட்க‌ளிலும்.

%d bloggers like this: