Skip to content

Date archive for: July 2010

இறுக்க‌ம்

சோடாக் க‌டை பாயின்,
வ‌ண்டிக்கார‌ தாத்தாவின்,
ஓய்வு பெற்ற‌
வாத்தியார்க‌ளின்,
அப்பா கால‌த்து
ச‌லூன் க‌டைக்கார‌ரின்

ப‌ழைய‌ உரையாட‌லுட‌னான‌
கைப்பிடியின்
இறுக்க‌ம்

ஒவ்வொரு முறையும்
அதிக‌மாகி வ‌ருவ‌தை
க‌வ‌னிக்காம‌ல்
இருக்க‌ முடிவ‌தில்லை.

ஒப்பில்லாத‌வ‌ன் ஒப்பீடு

உற்ச‌வ‌ர் சொன்னார்
“த‌ங்க‌க் காப்பு,
ச‌ந்த‌ன‌க் காப்பு, அபிஷேக‌ம்,
அல‌ங்கார‌ம், ஆறுகால‌ பூஜை
எல்லாமே உன‌க்கு.. என்
நிலைமை ?!..”

மூல‌வ‌ர் ப‌தில் சொன்னார்
“இது பெருசில்ல‌..
உன்னைப் போல‌
த‌ங்க‌த் தேரில், பெரிய‌ ர‌த‌த்தில்,
வாண‌ வேடிக்கையோடு,
பெரிய‌ ஊர்வ‌ல‌மாக ஊர் முழுக்க‌
சுத்தி வ‌ர‌ என‌க்கு
முடிய‌லையே !”.

ஒப்பில்லாத‌ இட‌த்திலும்
ஒப்பீடு உண்டென்று
அறிக‌.

அக்குத்தொக்கு

அம்மா ஊரில் இல்லாத‌
வேளைக‌ளில் சமைக்கும்,
தம்பியின் வேலைக்காக‌
விர‌தமிருக்கும்,
அக்கா

அண்ண‌னைப் போல‌
வ‌ருமாயென‌ பெருமைபேசும்,
10 ரூபாய் நெயில்பாலிஷுக்கு
கூட‌ ம‌கிழ்ந்து போகும்,
அண்ண‌ன் என்ன‌ சொல்லுதோ
அதை செய்ய‌லாமென‌
விட்டுக்கொடுக்கும்,
த‌ங்கை

அக்குத்தொக்கு இல்லாத‌
குடும்ப‌மென்ப‌து
அக்கா த‌ங்கை இல்லாத‌
குடும்ப‌மென பொருள் காண‌வும்.

ஒரு அப்பாவின் யுத்த‌ம்

புது ஃப்ளாட்,உள் அல‌ங்கார‌ம்,
ம‌ர‌ வேலைக‌ள்,
மார்பிள் த‌ரை
என‌ பெருமையோடு காட்டி 
சிரித்த‌ப‌டி
உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தான்
ந‌ண்ப‌ன்..

த‌வ‌ழ்ந்து வ‌ந்த‌ இரண்டாவ‌து
குழ‌ந்தையை
பார்த்த‌ப‌டி கேட்டான்
“த‌ங்க‌ம் ஏண்டா இப்ப‌டி
வெலையேறுது ”

அடுத்த நீண்ட‌
யுத்த‌த்திற்கான‌
அலுப்புட‌ன்.

%d bloggers like this: