வாசலில் நின்றால்
அதிக நேரம் டிவி பார்த்தால்
டியுஷனில்ருந்து வர லேட்டானால்
எதிர்த்துப் பேச முயன்றால்
சத்தமாக சிரித்தால்
பொட்டு வைக்காமலிருந்தால்
என
எதற்கெடுத்தாலும்
எரிந்து விழுந்த அப்பா
உலகம் தெரியாம அதை
வளர்த்துட்டேனே என்று
மண்டபத்தில்
தேம்பியழுத போது
வராத அழுகை
புதுக்குடித்தனத்தில்
தனியான வீட்டில்
அப்பாவை நினைத்ததும்
அருவியாக
வந்தது.