அலை அலையான சீலை
உயர்வதற்கு முன்
வெள்ளைத்திரையை
வெறித்திருக்கும் நேரம்
பிசின் தடவி சைக்கிள் ட்யூப்
காயும் நேரம்
வாரப் பத்திரிகைக்கு
உங்களுக்கப்புறம் நானெனக் கூறி
கலைக்கதிர் மேயும் நேரம்
தேர்வெழுதத் துணிந்தும்
வினாத்தாள் கையில் வர
மார்ஜின் போட்டுக்கொண்டிருக்கும் நேரம்
டாக்டர் வரும் வரை
மருந்து விளம்பரங்கள்
படிக்கும் நேரம்
படத்திற்கு முன்பாக
லோக்சபா, ராஜ்யசபா செய்திகள்
கடக்கும் நேரம்
மனம் வேகமாகவும்
கணம் சாவகசமாகவும்
நகரும் தருணங்கள்