Skip to content

Date archive for: March 2015

கேட்பவர்கள்

நின்று,
ரசித்து,
வியந்துப் பின்
சிரித்துவிட்டு
நகர்கின்றனர்

உயர்ந்த கட்டிடத்தில்
பெரிய தேன் கூட்டைப்
பார்த்தும்

என் 
கவலைகளைக்
கேட்டும்.

நழுவும் நினைவுகள்

ஒரு செருப்பு தைக்கப்படும்போது
இன்னொரு செருப்போடு காத்திருந்தது

மளிகைக் கடைக்குப் போன் போட்டு
சொந்தத்தோடு பேசியது

‘மொதோ’ பஸ்ஸுக்காக 
பனியில் காத்திருந்தது

அடைமழையில் பைக்கில்
போனது

கழன்ற சைக்கிள் செயினை
சாலையோரம் நின்று
சரி செய்தது

தண்ணீர் குடித்து, சிரித்துப்
புரையேறியது

இவையாவும் நினைவிலிருந்து
மெல்ல மெல்ல  
நழுவுகிறது

கடற்கரையில் 
திரும்பிப் போகும் அலையால்,

காலின் அடியில் மணல் 
அரித்துச் செல்லப்படுவதைப்போல.

தெய்வம்

கோபுரத்தில்,
கொடிமரத்தில்,
நெய் விளக்கு வெளிச்சத்தில்,
நெடும் பிராகாரத்தில்,
தல விருட்சத்தில்,
தேடியும் காணாது
திரும்பினேன்.

பூங்காவில்
தனியாக
காதில் மெஷின் வைத்த
சிறுமியாடும் ஊஞ்சல் அருகே
யாருமில்லால் இன்னொரு
ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தது.

நகரத்தில்

ஊரை மறந்து
மின் ரயிலில் விரைந்து
அவசரமாகப் பாட்டு கேட்டு
மெஷின்களோடு வேலை செய்து
பெருநகரத்தில் வாழப்
பழகிக்கொண்டோம்

உயரமான அலுவலகத்தின்
கண்ணாடியின் உள்ளே
நாங்களும்

காடும், அருவியும்,
கற்பாறைகளும் மறந்து

அதே கண்ணாடியின் வெளியே
பெரிய கூடு கட்டி வாழும்
தேனீக்களும்.

%d bloggers like this: