Skip to content

Date archive for: April 2015

மதிய நேரத்து உரையாடல்

வேறு கண்ணாடி மாற்றுவது,
ஷிர்டிக்கு போக நினைப்பது,
யாரும் தன்னைப் பார்க்க‌
வராமல் இருப்பதெல்லாம் பற்றி
ஸ்கூல் பேக் மாட்டிய‌
பாட்டிக்கும்,

இது எதுவும் கேட்காமல்..
உள்ளங்கையில் பெயிண்ட்
வைத்து பேப்பரில் பதித்தது,
நவீனுக்குப் பல் விழுந்தது,
மிஸ் தன் கையில் ஸ்மைலி
வரைந்தது,
ஸ்பைடர்மேன் பற்றியெல்லாம்
தலை கலைந்த
எல்.கே.ஜி. சிறுமிக்குமான‌
உரையாடல்..

சேர்ந்தே நடந்தும்
சேராமல் இருக்கும்
தண்டவாளங்கள்
போலவே !

முரண்

குட்டிக் கிண்ணத்தில்

தண்ணீர் வைத்தார்

குடிக்க‌


சின்ன சின்ன‌

சப்போட்டா பழம் குடுத்தார்

சாப்பிட‌


ஒரு விரல் நீட்டி

நாலு விரல் கால்கள்

பற்றி வெளியே

எடுத்து ஏதோ பேசினார்,

பச்சைக்கிளியிடம்


பெரிய கத்திரி எடுத்து

மெதுவாக வெட்டினார்

சற்றே நீண்ட‌

சிறகுகளை


காலில்லாத

மரத்தடி

ஜோசியர்.

மீதி மணல்

முதல் நாளில்
பார்த்த..

குழந்தைகள் எழுதி
அலை அழித்த சித்திரங்கள்

அலைக்குப் பயந்து 
அப்பாவின் காலைக் கட்டிய‌
மகள்

வெட்கத்தில் முழுதும்
அலையில் கொஞ்சமும்
நனைந்த‌
மெட்டிக் கால்கள்

எல்லாம் காட்சியாய்
வந்து போயின‌

துவைக்கப் போடும் 
பேண்ட் பாக்கெட்டில்
எடுத்த‌
கையளவு கடற்கரையில் !
%d bloggers like this: