கடற்கரையில்

” இன்னும் கொஞ்சம்
நேரம்மா ! ப்ளீஸ்மா !”
என்றபடி பலமுறை கெஞ்சியபடி
புது நண்பர்களின் கால்களை
மீண்டும் மீண்டும்
பால் நுரையால் நிறைத்து,
பாதங்களின் கீழ் மண் அரித்து
பின்னும் முன்னும்
விளையாடிக் கொண்டிருந்தது
அலைக் குழந்தை..

ஆழி அன்னையின்
சொல் கேளாமல் !

நூல் மழை

ஓரத்தில் ஈரம் பட்டு
சிதறிய தினசரிகள்
போர்டில் எழுதிய குறளும்,
சந்தா நோட்டிசும்
நனைந்தபடி குளிரில்
வழக்கத்தை விட
நெருக்கியடித்தபடி
புத்தகங்கள்
அடங்காத ஜன்னல்களோடு
போராடும் ஊழியர்
மாவட்டக் கிளை நூலக
போர்டின் மேல் விழுந்த
மரக்கிளை
நூல் போலவே பெய்தது
வார்த்தைகள் உறங்கும்
நூலகத்தின் மேல்
மழை !

அகல்யா

இரவு திறக்கும் நேரம்,
வீசும் காற்றோடு சேர்ந்து
அடித்தது மழை
வயது கடந்த மரத்திலிருந்து
விழுந்தது கிளை
விழித்த வாரியம்
மின்னோட்டம் அணைத்தது

மெழுகின் கால் கீழேயும்
சுடரின் கால் மேலேயும்
ஒளி வட்டத்தோடு சிணுங்கி
சற்று மெதுவாகவே
படபடப்பாகவே
எரிந்துகொண்டிருந்தது
மெழுகுவர்த்தி..

மின்சாரம் வந்ததும்
3 வயது அகல்யா
ஒடி வந்து ஊதி, கைத்தட்டி
கத்தப்போகும் தருணத்தை
எதிர்பார்த்தபடி.

குற்றாலம் – 3

மேகக் கிரீடமணிந்து
மலைகள் காத்திருக்க
கத்திரியில் கருத்தப் பின்னும்
கற்பாறைகள் காத்திருக்க
அசைவுகளின்றி உயர்ந்த
ஒற்றை மரங்கள் அண்ணாந்திருக்க
கடன் வாங்கி முதல் போட்டு
சைக்கிள் யாவாரிகள் பார்த்திருக்க
சேர நாட்டு மழைக்காலத்தில்
சாரலும் இரைச்சலுமாக
இரண்டு மாதம் ஆடிக்
களித்திருக்கும் வெள்ளருவி..

முழு ஆண்டுத் தேர்வு லீவில்
இரண்டு மாதம் வரும்
எதிர் வீட்டு
ஜெனிஃபரைப போலவே !

குற்றாலம் – 2

அருவியில் அடித்துப்
போனது கொஞ்சம்
விளையாட்டுகளில் விலகிப்
போனது கொஞ்சம்
கேளிக்கையில் கொட்டிப்
போனது மேலும் சில
டீ கிளாஸ் அரட்டையில்
தொலைந்தது மீதியென
மூன்று நாட்களில்
தொலைத்தேன்,
ஒரு இருபது+ ஆண்டுகள்..

ரயிலில் திரும்பும்போது
ஒவ்வொரு ஸ்டேஷனுக்கும்
ஒவ்வொரு வயது கூடி
எக்மோரில் இறங்கும்போது
கண்ணாடியில் தெரிந்தேன்
ஒரு ஹாஸ்டல் மாணவனை
நரையில் மறைத்த நான் !