Skip to content

Date archive for: July 2015

குற்றாலம் – 2

அருவியில் அடித்துப்
போனது கொஞ்சம்
விளையாட்டுகளில் விலகிப்
போனது கொஞ்சம்
கேளிக்கையில் கொட்டிப்
போனது மேலும் சில
டீ கிளாஸ் அரட்டையில்
தொலைந்தது மீதியென
மூன்று நாட்களில்
தொலைத்தேன்,
ஒரு இருபது+ ஆண்டுகள்..

ரயிலில் திரும்பும்போது
ஒவ்வொரு ஸ்டேஷனுக்கும்
ஒவ்வொரு வயது கூடி
எக்மோரில் இறங்கும்போது
கண்ணாடியில் தெரிந்தேன்
ஒரு ஹாஸ்டல் மாணவனை
நரையில் மறைத்த நான் !

குற்றாலம் – 1

மழையில் மண்சரிவு போல்
இன்பாக்ஸில் மெயில்சரிவு
தேங்கிய வேலைக்கு
முதலாளியின் சத்தம்
ஓங்கிய குரலில்
மனைவியின் ஓசை
ஸ்தம்பித்த டிராஃபிக்கில்
வாகனங்களின் ஒலி
ஓயாமல் அடித்தபடி
ஃபோனின் ரீங்காரம்
எனக்குள் எதுவும்
நுழையாமல்,
ரகசிய சிரிப்புடன்
அலையும் என்..

காதெல்லாம் அடைத்தபடி
அருவியின் பேரிரைச்சல் !

கிணறு

இரு கொம்பு வைத்து – இடையே
ஒரு சிறு சக்கர ராட்டினம்
வைத்த கிணறு
அதன் குறுக்கே கம்பி கிராதி
தூங்கும் பாம்பாக
தாம்புக்கயிறு

அதனுள் இருட்டில்
சிறைப்பிடிக்கப பட்டிருந்தது

கொஞ்சம் நீரும்,
ஒரு வட்ட ஆகாயமும்,
பஞ்சு மேகமும் – எங்கள்
தண்ணீர் பஞ்சமும்

வடிவியல்

கண்ணாடிக் கோலி கோளம்
எறிந்த சில்லோடு சதுரம்
எழுப்பிய அலைகள் வட்டம்
தளும்பிய குளம் செவ்வகம்
வசித்த வீடு கனச்சதுரம்
அதன்மேல் கூரை கூம்பு
அறையில் ட்ரங்குப் பெட்டி
கனச்செவ்வகம்
அதில்..
வடிவம், கனம்,
பரிமாணம், பரப்பளவு
எதுவுமில்லாமல் !

%d bloggers like this: