Skip to content

Date archive for: September 2015

சதுர்த்தி

என்னில் விரிசல் விழுந்தால்
தண்ணீர் தெளித்து வைப்பீர்
எருக்கம் மாலையும், புல்லும்
அணிவிப்பீர்
கண்ணில் விழ சந்தனம்
தெளிப்பீர்
தொலைக்காட்சி பார்த்தே
படைத்தும் தொலைப்பீர்
என் தொப்புளில் பவுன் காசு
அகற்றி ஐந்து ருபாய் நாணயம்
வைக்க மறக்க மாட்டீர்
மாலையில் அவலும் தண்ணீரும்
கொடுத்து வழியனுப்பிடுவீர்
தெரியவில்லை
பிறந்த மூன்றாம் நாளில்
கிணற்றில் தள்ளப்படும் சோகம்
வேறு ஒரு தெய்வத்துக்கு
நிகழுமாயென.

 

மீத்தேன்

தற்காலிகமாக மூடப்பட்ட சாலையில்
ஆட்கள் வேலை செய்கிறார்கள்
சாலையோரக் குடிசையில்
பண்பலை வானொலியில்
பாட்டுக்கு நடுவே
செயற்கைக்கோள் பற்றி ஒரு
நிபுணர் பேசிக்கொண்டிருந்தார்
அதன் எதிரே..
சேர்த்துக் கட்டிய நீள
மூங்கில் பத்தைகள் சொருகிய
கருப்பு நீர் குட்டையிலிருந்து
மீத்தேன் தாக்கியவனை
மேலே கொண்டு வந்து
ஆட்டோவில் போட்டு ஓடினார்கள்
பல ஆயிரம் மைல்கள் மேலே
மீத்தேன் தேடி ஒரு செயற்கைக்கோள்
சுற்றி வர,
பண்பலையில் இப்போது
காதல் கிரிக்கெட்டு பாட்டு
ஒலித்துக்கொண்டிருந்தது.

கேள்வி பதில்

உன் கேள்விகள் பெரும்பாலும்
இரை நெருங்கிப் பாயும் சிறுத்தையென,
சொருகித் திருகப்படும் நீள வாளென,
எதிர்பாராமல் இறங்கிய வேல முள்ளென,
என்னைத் தாக்கும்
என் பதில்கள் பெரும்பாலும்
கூர் கண்ணாடி சில்லுகள் பதிந்த
மதில் சுவற்று அணில் போல,
சாவகாசமாக விழும் இலை போல
பூங்காவில் கை பிடித்து நடக்கும்
முதியவரின் நடை போல
இருந்திருக்கும்
பதில் இல்லாத பொழுதுகளில்
ஒரு ஆவேசமான மௌனம்
கூடு கட்டி விடும்
என்னைச் சுற்றி.

 

மணல் பறவை

எப்போதோ
நுரை பொங்கி சுழித்து
கரை தளும்பி, பள்ளி முடிந்த
குழந்தையின் வேகத்தில்
நகரும் நீரெங்கும்
நீல ஆகாயம்
பிரதிபலித்திருக்க
தன் பிம்பம் தண்ணீரில்
பார்த்ததை லேசான குளிரோடு
நினைத்ததுகொண்டது
நீர்ப்பறவை..
வேறொரு நாளில்
அனல் பறக்கும்
மணல் திட்டில்
அலைஅலையாக
சுட்டபடி நகரும்
தன் நிழல் பார்த்து
பெருமூச்சோடு போனது
மணல் பறவையாக.

%d bloggers like this: