Skip to content

Date archive for: January 2016

குரல்

சிலிண்டர்காரரின் வருகை
நீர் கேட்கும் பூ விற்பவர்
பேரனின் பள்ளி ஆட்டோ
அகாலத்தில் திறக்கும்
“கேட்”டு சத்தம்
நிரம்பி வழியும்
மேல்தொட்டி நீர்
டீவியில் சிவாஜி
படம்
இவையெதற்கும்
முன்பு போல்
குரல் கொடுப்பதில்லை
சந்தன மாலை ஆடும்
கண்ணாடி சட்டகத்தில்
விபூதியுடன் சிரிக்கும்
அப்பா !

முரண்

சலிக்கும் வரை
தருவாய்
வலிக்கும் வரை
தராமல் இருப்பாய்
ஒற்றை நட்சத்திரமாய்
இருப்பாய்
பல சூரியனாகிக்
கொதிப்பாய்
இரவு வானவில்
நீர்மூழ்கி ரயில்
உறைந்த வெப்பம்
தெளிந்த குழப்பம்
வெள்ளை நிழல்
உரத்த மௌனம்
நீ
எனக்கு.

திசை

ஓடும் வேகத்தில்
பஸ்ஸின் கண்ணாடியில்
பட்ட மழை
மேல்நோக்கி நகர்கிறது
புவியீர்ப்பின்
திசைக்குழப்பத்தோடு

சறுக்கும் துளிகள்

ஜன்னல் கம்பியில்
வேகமாக நகர்ந்து
இடித்துக்கொள்கின்றன
மழைத்துளிகள்
சறுக்கு மரத்தில்
இடித்துக் கொண்டு
சிரிக்கும்
குழந்தைகளைப் போல.
%d bloggers like this: