Skip to content

Date archive for: January 2016

நூல் கோட்டை

புதுமைப்பித்தனோ
பொது சிவில் சட்டமோ
கவலையில்லை
விலை அதிகமோ
மலிவு விலைப் பதிப்போ
பார்ப்பதில்லை
எப்படியும் கட்டி விடும்
வேலியும் வீடும் ஒன்றேயான
நூலால் கட்டிய
தனக்கான நூலகத்தை !

 

நூல் கட்டப்பட்ட தும்பி

நட்ட கல்லில்
கட்டப்பட்ட கயிறால்
ஆரம், வட்டம் உருவாவது
தெரியாமல் சுற்றி வரும் மாடு
பல மைல்கள் நடந்து
வளர்ந்த காடு மறந்து
கால் கொலுசு மாட்டி
போட்டோவுக்கு மிரளும்
கோயில் யானை
காட்டுப் பறவை தானென
அறியாமல்,
பறக்கும் பழக்கம் மறந்து
சிறு நெல்லுக்கு நடந்து
சீட்டுப் பொறுக்கும் கிளி
பனி மலையில்,
பரந்த கடலில்,
பெரும் அருவியில்,
வாழும் கனவில் நான்
ஹெல்மெட்டும்,
ஐடி கார்டுடன்
போக்குவரத்து நெரிசலில்.

மறைவோம்

மின்னலொளியில் மின்மினியாக
பப்பாளிச் செடியில் பச்சைப் பாம்பாக
கடல் மேல் தூறலாக
கரும்பாறையில் சிறு தேரையாக
கரையில், மணல் நிறத்தில்
நகர்ந்து மறையும் சிறு  நண்டாக
நம்மில் மறைவோம்  நாம் !

 

%d bloggers like this: