கேள்விகள்

சில நூறு
கேள்விகளோடு
கோவில் பிரகாரத்தில்
நான்
வயது வந்து மனதளவில்
வளராதப் பெண் குழந்தையோடு
விளக்கேற்றும் பெண்மணி,
கூட வந்தவர் துணையோடு
ஆரத்தி ஒற்றிக்கொண்ட
பார்வையில்லாதவர்,
கலசத் திருட்டை விசாரிக்க
சாக்சோடு சுற்றிய
போலீஸ்காரர்
பல நூறு
கேள்விகளோடு
வெளியே வந்தேன் நான்

முதிர் சிரிப்பு

எப்பொழுது போனாலும்
ஊரில் பார்க்க நேரிடும்
அந்த மனம் பிறழ்ந்த
முதிர்ந்த பெண்மணியை
சொம்பில் டீ வாங்க
சிரித்தபடி
தெருவில் போவார்
ரிப்பன் சடை,
ரப்பர் வளையல்,
பூப் போட்ட
பாவாடையும்,
நைலக்ஸ் தாவணியில்
காலச்சக்கரத்தைக்
கட்டி நிறுத்தியக்
களிப்போடு

குளக்கரைப் பிரிவு

நிசப்தமான
இரவின் நிழலில்
குளக்கரை நிலவொளியில்
நிகழ்ந்தது
நம் பிரிவு
முதலில் நீரிலலைந்து
கலங்கிபின், சரியாகிவிடும்
நிலவின் வடிவமென
சில வாரங்களில்
உன் வாழ்வு
மேலும் குளிர்ந்து
இறுகிவிடும்
கல் படிக்கட்டாகிவிடும்
பல வருடங்களில்
என வாழ்வு

 

கொக்குகள்

மேக நிழல் துரத்தி
நாங்கள் ஓடும்
மைதானத்தின் மேல்
விரிந்த வானத்தில்
கொக்குகள் பறக்க
உரக்கப் பாட்டு பாடி
உரசிய நகங்களில்
வெள்ளை கொக்குகள்
பார்த்து சிரிப்போம்
அவை
சத்துக் குறைபாடு
என பிற்பாடு
தெரிந்தபோது
தொலைந்து போயிருந்தன
மைதானமும்,
வானமும், பறக்கும் கொக்குகள் 
நகத்திலும்,
வானத்திலும்.

 

அதே

அதே பொலிவு
அதே மலர்ச்சி
அதே அழகு
பச்சை சாணத்தில் நட்ட
மஞ்சள் பூவிலும்