Skip to content

Date archive for: March 2016

தீ

குளக்கரையில் நிற்கும்
தேரில் எரியும் தீ
குளத்து நீரிலும்
எரிந்தது
கீழ்நோக்கி

பிம்பம்

மழை முடிந்த நாளில்
மூடிய பூங்காவில்
கால் வைத்தழுத்திய
பள்ளத்து நீரில்
பிம்பம் பார்த்தபடி
வெறும் காற்றில்
ஆடிக்கொண்டிருந்தது
ஊஞ்சல்.

குளக்கரை நாகரிகம்

மலையுச்சி கோயிலில்
இருந்து கீழே பார்க்க
குளத்தை மூடிக்
கட்டியிருந்த
புது பஸ் ஸ்டாண்ட்
சின்னதாகத் தெரிந்தது
பஸ் ஸ்டாண்டும்
பக்க வாட்டில் நிறுத்திய
பஸ்களும்
காய வைத்த  மீன் முட்கள்
போல இருந்தது
குளக்கரை நாகரிகங்கள்
மேல் மீதியிருந்தது
என்னவோ வெறும்
பேருந்தின் சக்கரத்
தடங்கள் மட்டும்தான்.

மெதுவாய்

பெருமரத்தில் தடம்
பதிக்காமல் பாவும்
எறும்பின் பயணம்
குளத்தின் நீர்பரப்பைத்
தொடாமல்  பரவும்
பனிப்புகை
ஆற்று மணலை
அசைக்காமல் இறங்கும்
மழை நீர்
கோயில் மணி அதிர்வில்
மெதுவாய் உதிரும்
பூவரசம்பூ
இப்படித்தான் என்னில்
நுழைந்தது உன்
நினைவுகள்
%d bloggers like this: