Skip to content

Date archive for: March 2016

தெரிவது

தெரிவது என் மேல் பனி
தெரிவதில்லை
என்னுள் கூர் முனை சிகரம்
தெரிவது என் புன்னகை
தெரிவதில்லை
என் வளைந்த நகங்கள்
தெரிவது என் ஒப்பனை
தெரிவதில்லை
அதன் கீழ் என வடுக்கள்
தெரிவது என் வாள் உறை
தெரிவதில்லை
அதனுள் உறைந்த ரத்தம்

பதற்றம்

மின்வெட்டு இருட்டில்
தீப்பெட்டி தேடும்,
மாவரைத்த கையில்
ஃபோன் எடுக்கும்,
பாதி சாலையைக் கடந்த பின்
மீதியைக் கடக்கும்,
ஏற வேண்டிய மின்ரயில் வந்து சேர
டிக்கட் எடுக்கும்,
லிஃப்டில் ஏற்கனவே ஒளிரும் பட்டனை
பலமுறை அழுத்தும்,
பதற்றங்கள் யாவும் கரை காணாது
நீ என்னைப் பார்க்காமல்
பார்த்துக் கடக்கும்
கலவரப் பதற்றம்
%d bloggers like this: