Skip to content

Date archive for: April 2016

சிதைந்த கனவு

மனைவியிடம் ஃபோனில்
விசாரித்திருக்கலாம்
தன் குழந்தையின் அழுகை
போனில் கேட்டு கலங்கியிருக்கலாம்
பின்னர் தானே புகைப்படம் எடுத்துச்
சிரித்திருக்கலாம்
ஊர் திரும்பும் நாள் கணக்கு
எண்ணியிருக்கலாம்
பொம்மை வாங்கும் பட்டியல்
மடித்து வைத்திருக்கலாம்
யூரோவால் ரூபாயை
பெருக்கிக் கொண்டிருந்திருக்கலாம்
பழைய பாட்டு கேட்டுத்
தலையசைத்திருக்கலாம்
சற்று தள்ளி பதட்டமான ஒரு
சக பயணியைக் கவனித்திருக்கலாம்
மேலும்
ஸ்தம்பித்துப் போயிருக்கலாம்
வெடித்துச் சிதறும் முன்.
** மறைந்த [ மறைக்கப்பட்ட ] இன்ஃபோசிஸ் ஊழியர் ராகவேந்திரன் கணேசன் அவர்களின் அஞ்சலியாக எழுதியது.

அடையாளம்

தன் வழி ஓடி
கடல் சேர்ந்து,
மேகம் சேர்ந்து,
மலை சேர்ந்துப்
பின் அதே வழியில்
ஓடிய ஆற்று நீரை
உருளும் கூழாங்கற்களுக்கு
அடையாளம் தெரியவில்லை

 

நெய்தல்

மண் தெருவில் பட்டு நூல்
பிரித்துக் காய வைப்பதில்லை
மின் தறி போட்டு
கட்டுப்படியாகவில்லை
பட்டுச் சேலை தரகு வேலையில்
பெரிய வருமானமில்லை
தாழ்வாரத்தை அடைத்துப்போட்ட
பழைய தறியில்
தன் வீட்டைத் தானே
நெய்யும் சிலந்தியை
சக நெசவாளியெனக் கொண்டு
கலைக்க மனமில்லாமல்
வேடிக்கை பார்த்தபடி
தட்சிணாமூர்த்தி
பொங்கலுக்கு ரேஷனில்
கிடைத்த அச்சடித்த
வேஷ்டி கொடியில் காயும் வரை
%d bloggers like this: