Skip to content

Date archive for: June 2016

நிறப்பிரிகை

ஆயில் பெயின்டிங்கில்
ஆகாயம் வரைந்து
வெவ்வேறு வண்ணம்
குழைத்து புது நிறம்
படைக்கும்
ஓவியப் படிப்பை
ஓர் இழப்பால்
பாதியில் நிறுத்திப்
பின்னர்
வெந்தயக் கலரா இல்ல
கிளிப்பச்சையாக்கா என
ராசி மேட்சிங் சென்டர்
வேலையில் தொலைந்தான்
நிறக் கம்பிகளில்
ரவிக்கைக்கான
வண்ணம் தேடிக்கொண்டு
தூரிகையில்லாமல்

எப்படியும்

எல்லா விசேஷங்களிலும்
பார்க்க நேரிடுகிறது
பார்வை புரியாமல்
சுவர் பிடித்து நடந்து
புறங்கை தடவி
அடையாளம் காணும்
பாட்டியும்
சப்தமெழுப்பி
சாப்பாடு ஊட்டப்படும்
மனம் வளராத
மங்கைக்குழந்தையும்
எங்கும் ஓடி
என் இருக்கையின்
பின்னால் சைகை காட்டி
ஒளிந்துகொள்ளும்
பட்டுச் சிறுமிகளும்

சில சமயம்

கலவரம் நடந்த தெருவின்
ஒற்றைச் செருப்பாய்
நடுக்கடல் மேல்
தனித்த பட்டாம்பூச்சியாய்
மலைக்கோவில் உச்சியின்
தனிக்கலசமாய்
வரிசை கலைந்த
சிற்றெறும்பாய்
இருள் கொட்டிய இரவின்
ஏகாந்தமான நிலவாய்
தன் திசை தெரியாமல்
திகைத்தே போகும்
என்
சில இரவுகள்

மீதி

நடு வயது கடந்து
கல்யாணம் ஆகாமல்
இறந்த ஒரு பழைய
ஜமீன் வாரிசின்
தனியறையில்
கிடைத்ததை
எடுத்துக்கொண்டனர்,
புடவை கட்டிய
ஒரு துணிக்கடை
பொம்மையை
மட்டும் விட்டு.
%d bloggers like this: