Skip to content

Date archive for: June 2016

கடந்து

பிணம் கடந்து போகும்
சாலையின் எதிரே,
மருத்துவமனையில்
அப்போது பிறந்த
குழந்தையின் ஒலி

ஆனாலும்

தெப்பம் விடப்படுவதில்லை
தாமரை பூப்பதில்லை
தளும்பும் அலைகளில்லை
ஏரிக்கரை சாலை பஸ்ஸின்
பிம்பம் விழுவதில்லை
ஆனாலும்
சுவற்றுப் பிளவில் சிரித்தாடும்
ஆடும் எருக்கஞ்செடி பார்த்தபடி
குளிர்ந்தே இருந்து விடுகிறது
கிணற்று நீர்
கிணற்றோடு

நனைய

பெருமழை பெய்து
மரம், மண் வீடு
மரவட்டை என
அனைத்தும் நனைய
தான் மட்டும்
நனைய முடியாத
சிறு வருத்தத்தோடு
சில்லிட்டு கிடந்ததது
குடைக்கம்பி

தானே

தன் விசிறியைத்
தானே சுமக்கும்
மயிலை விடவும்,
தன் நிழலைத் தான்
பார்க்காது உயர்ந்து போகும்
மரத்தைக் காட்டிலும்
வசீகரமானது
தன் நிழலோடு
தானே ஆடும்
பூனைக்குட்டி
%d bloggers like this: