கணம்

எல்லா பால்ய
நினைவுகளைத்
தேக்கி வைத்திருந்தாலும்,
யாருக்கும்
நினைவில் இருப்பதில்லை
தனக்கு சைக்கிள் பேலன்ஸ்
ஆகும் அந்த
தேவகணம்.

 

எறும்பு

கிடத்தி வைத்திருந்த
வீணையின் நரம்பில்
ஊர்ந்து கொண்டிருந்தது
எறும்பு..
ஒரு நீண்ட
இசைப்பயணத்தின்
பகுதியாக

 

தலைகீழ் மழை

விடியும்போது
ஆரம்பித்து விட்டது..
நடை திறக்காத கோவில்
நிரம்பி, மேலும்
சின்ன வளையங்கள்
உண்டாக்கியபடி
குளம்
நனைந்த கொடிமரம்
தேர் நிறுத்திய
தகர கொட்டகையின்
மேல் நீரின் தாளம்
எப்படி இருந்தாலும்
நூறு கால் மண்டப
வவ்வால்கள் கேட்டதெல்லாம்
பெரும்சப்தம்
தலைகீழ் மழையால்.

வெளியேறியது

பத்தாம் நாள்
காரியத்து சாப்பாடு
முடித்த மதியத்தில்
மொட்டையடித்திருந்த
சின்னண்ணன் பாட்டியிடம்
ஏதோ சொல்லி
சிரிக்கையில்,
படியிறங்கி ஊர்ந்து
வெளியேறியது
ஒரு மரணம்.